பழி வாங்கிய மந்திரவாதி

"தாய்மார்களே, குழந்தைகளே, பெரியோர்களே, இதோ பாருங்கள். நான் வைத்திருக்கும் இந்தத் துணியில் ஒன்றுமில்லை, காலியாக இருக்கிறது!" (கையில் ஒரு துணியை விரித்து எல்லாப் பக்கமும் சுற்றி காண்பிக்கிறார்.)



"இப்போது சின்னப் பசங்க எல்லாம் ஜோரா ஒரு தரம் கை தட்டுங்க. இந்தத் துணியிலிருந்து தங்க மீன்களை எடுக்கப் போகிறேன்!" என்று சொல்லிவிட்டு கையில் வைத்திருந்த மந்திரக்கோலால் துணியை மூன்று தரம் சுற்றி மொன மொனவேன்று ஏதோ சொன்னார். அப்புறம் கையைத் துணிக்குள்ளிருந்து எடுக்க ஒரு பாத்திரத்தில் தங்க மீன்கள்.

"ஆஹா! ஆச்சரியம், ஆச்சரியம்"என்று பார்க்க வந்தவர்களெல்லாம் வியந்தார்கள். ஆனால் முன் வரிசையிலிருந்த ஒருவர் மட்டும் "ஊம்! சும்மா இது கண்கட்டு வித்தை! மீனை தன்னுடைய சட்டையின் கைக்குள் மறைத்து வைத்திருப்பார்" என்றார். உடனே எல்லோருமாக "அப்படித்தான் இருக்கும். ஆமாம்.. இந்த மந்திரவாதி சட்டையின் கைக்குள் இருந்துதான் எடுத்திருப்பார் என்று ஆமோதித்தார்கள்.

மந்திரவாதி அந்த முன் வரிசையிலிருந்த முந்திரிக்கொட்டையை முறைத்தார்.

"எனது அடுத்த வித்தை. இதோ இந்த வளையங்களைப் பாருங்கள். ஒவ்வொன்றும் தனித்தனியாக இருக்கின்றன. இந்த வளையங்களையெல்லாம் எப்படி ஒன்று சேர்க்கிறேன் என்று கவனியுங்கள்."

பிறகு வளையங்களைச் சுழற்றி எதோ முணுமுணுத்து கைகளை மேலும் கீழும் ஆட்ட.. ஆச்சரியம்! எல்லா வளையங்களும் ஒன்று சேர்ந்தன. கூட்டம் உற்சாகத்தில் ஆஹா.. ஆஹா.. என்று ஆஹாகாரம் செய்தது! ஆனால் முன் வரிசையிலிருந்த அந்த முந்திரிக் கொட்டை மட்டும், "இது என்ன வித்தை! வெறும் ஏமாற்று. இன்னொரு செட்டை தனது சட்டையின் கைக்குள் வைத்திருப்பார்” என்று விமரிசித்தது.

"ஆமாம், ஆமாம்! இன்னொரு செட்டை சட்டைக் கைக்குள்தான் வைத்திருந்திருப்பார்" என அனைவரும் ஆமோத்தித்தார்கள்.

மந்திரவாதி முகத்தில் ஒரு ஏமாற்றம்.

"அடுத்ததாக, நான் ஒரு தொப்பியிலிருந்து முட்டைகளை எடுக்கப் போகிறேன். யாராவது தொப்பி வைத்திருந்தால் கொடுங்கள்" என்று சொல்ல, கூட்டத்திலிருந்த ஒருவர் தன் தொப்பியைக் கொடுத்தார். "நன்றி" எனக் கூறிவிட்டு வழக்கம்போல தொப்பியை மூன்று சுற்று மந்திரக்கோலால் சுற்றி ஏதோ மந்திரம் சொல்லி தொப்பியிலிருந்து பதினேழு முட்டைகளை வரிசையாக ஒவ்வொன்றாக எடுத்தார்.
வந்திருந்தவர்கள் எல்லோரும் "பிரமாதம், பிரமாதம்" என்று ஆரவரிக்க, முன் வரிசைக்காரர் மட்டும் வழக்கம்போல முட்டைகளை தன் சட்டையின் கைக்குள் ஒளித்து வைத்திருப்பார் என பழைய பல்லவியையே பாடினார். உடனே கூட்டத்திலிருந்தவர்களௌல்லாம் உற்சாகம் குறைந்து, "ஆமாம், அப்படித்தான் இருக்க வேண்டும் "என்று ஆமாம்சாமி போட்டார்கள். மந்திரவாதிக்குத் தாங்க முடியாத எரிச்சல்.

மந்திரவாதி ஒவ்வொரு வித்தையாகச் செய்ய முன்வரிசைக்காரர், அவரது சட்டையின் கைக்குள் ஒளித்துவைத்திருக்கிறார் என்று சொல்ல, அதனை அனைவரும் ஆமோதிக்க, அப்படியே இந்தக் கதை தொடர்ந்தது. மந்திரவாதி தன் சட்டையின் கைக்குள் முட்டைகள், வளையங்கள் மற்றும் மீன்கள் தவிர நிறைய சீட்டுக்கட்டுகள், ஒரு டெட்டி பேர், ஒரு நாற்காலி மற்றும் சில பறவைகள் வைத்திருக்கிறார் என்பதை முன்வரிசைக்காரர் உறுதிபடுத்தினார்!

மந்திரவாதி எல்லாரையும் ஏமாற்றுகிறார் என்ற எண்ணம் அனைவரிடமும் உதிக்க ஆரம்பிக்க, அவரது இமேஜ் பெரிதும் சரிந்தது. இதற்குக் காரணமான முன்வரிசைக்காரரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது.

அவர் சொன்னார். "தாய் மார்களே, பெரியோர்களே! நான் இப்போது காட்டப் போகும் வித்தை இதுவரை நான் எந்த இடத்திலும் செய்யாதது. ஜப்பானில்தான் சமீபகாலத்தில் முதல்முதலாக கண்டு பிடிக்கப்பட்டது. "எங்கே எல்லாரும் ஒரு முறை கைதட்டுங்கள்" என்று கூறிவிட்டு, முன்வரிசை முனுசாமியிடம், "உங்கள் தங்க கைக்கடிகாரத்தை சற்றுத் தாருங்கள்" என்றார். அவரும் ஏதோ சொல்கிறாரே என்று தன் கடிகாரத்தைக் கொடுத்தார்,

"சார், நான் இந்தக் கடிகாரத்தை இந்த சின்ன உரலில் போட்டு இடித்துப் பொடியாக்கலாமா?” என்று கேட்டார். புது வித்தையாக இருக்கிறதே, பார்க்கலாம் என்று அந்த ஆசாமியும் சரி என்று சொன்னார். மந்திரவாதியும் கடிகாரத்தை உரலிலிட்டு தன் கையிலிருந்த சுத்தியலால் அதைப் பொடிப் பொடியாக்கினர்.

"தாய்மார்களே, பெரியோர்களே பாருங்கள். இது ஒன்றும் ஏமாற்று வித்தையில்லை. கடிகாரம் தூளாகியிருப்பதை நீங்களே கண்கூடாகப் பாருங்கள்" என்று உரலை எல்லார் பக்கமும் திருப்பிக் காட்டினார்.

முன்வரிசைக்காரர் முகத்தில் ஒரு முறுவல். இந்த முறை நிஜமாகவே ஏதோ வித்தை காட்டப் போகிறார் என்று. மந்திரவாதி அவரிடம் மீண்டும் "உங்கள் தொப்பியைத் தரமுடியுமா?" என்று கேட்க, அவரும் கொடுத்தார். மந்திரவாதி அந்தத் தொப்பியைக் காலால் மிதித்து நடனமாடி துவம்சம் செய்தார்.

"உங்களுடைய டையை எனக்குத் தரமுடியுமா?" என்று கேட்டு வாங்கி அதனை எரித்தார். உங்கள் கண்னாடியை உடைக்க அனுமதிப்பீர்களா? என்று கேட்டு கண்னாடியை சுக்கு நூறாக உடைத்தார். என்னவோ செய்யப்போகிறார் என்ற பரபரப்பில் மொத்த பார்வையாளகளும் முன்வரிசைக்காரரும் ஆவலோடு காத்திருந்தார்கள்.

"பெரியோர்களே, இப்போது இந்த முன்வரிசையிலிருக்கும் அவர் அனுமதி கொடுத்தால் அவரது உடம்பில் கருப்பு வெள்ளைப் புள்ளி குத்துவேன். இல்லையென்றால் இந்த மேஜிக் காட்சி இத்துடன் முடிந்தது. அனைவருக்கும் நன்றி” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

பலத்த பின்னணி இசைக்கு இடையே திரை விழுந்தது. பார்வையாளர்கள் பேசிக்கொண்டார்கள். ”சில வித்தைகள் ஏமாற்றாக இருந்தாலும், சட்டையின் கைக்குள் ஒளித்து வைக்காத சில வித்தைகளையும் மந்திரவாதி செய்தார்” என்று.

(மூலம் : Stephen Leacck's literary lapses)