நோன்பு கேள்வி - பதில்கள்!

நோன்பு கேள்வி - பதில்கள்!
 
கேள்வி: மன திருப்திக்காக நோன்பு நீய்யத்தை தமிழில் சொல்லிக் கொள்ளலாமா..?  ஒளு செய்து விட்டு மனைவியை முத்தமிட்டால் ஒளு முறியுமா..? 

விளக்கம்: ஹஜ்-உம்ராவிற்கு தவிர மற்ற அமல்களுக்கு நிய்யத் சொல்ல வேண்டும் அல்லது செய்ய வேண்டும் என்ற எந்த விதியும் மார்க்கத்தில் இல்லை. நிய்யத் என்றால் என்னவென்று விளங்காததால்தான் நாம் நியத்தை வாயால் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.எனவே முதலில் அதை விளங்குவோம்.
'இன்னமல் அஃமாலு பின்னிய்யத்'| என்பது நபிமொழி.(புகாரி)
எண்ணங்களின் அடிப்படையிலேயே செயல்கள் அமையும்-என்பது இதன் பொருள். நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் அந்த செயல் நம் எண்ணத்தில் உதிக்க வேண்டும். தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால்தான் நாம் தண்ணீர் குடிப்போம் இதுதான் நிய்யத் 'நான் இப்போது தண்ணீர் குடிக்கப்போகிறேன்' என்று யாரும் வாயால் சொல்லி விட்டு தண்ணீர் குடிப்பதில்லை.
குடிப்பது-நடப்பது-தூங்குவது-பார்ப்பது-என்று நமது ஒவ்வொரு செயலும் நிய்யத் அடிப்படையிலேயே அமைகின்றன. வணக்க வழிபாடுகளுக்கான நிய்யத்தின் நிலையும் இதுதான்.
தொழவேண்டும் என்ற எண்ணம் இருந்தால்தான் ஒளுசெய்ய முடியும் தொழுகைக்கு தயாராக முடியும். இப்படி தயாரான பிறகு மீண்டும் நிய்யத் செய்கிறேன் என்பது அறிவுக்குப் பொருந்தாத மார்க்கத்தில் இல்லாத காரியமாகும். நிய்யத் செய்கிறேன் என்று அரபியிலோ தமிழிலோ சில வார்த்தைகளை கூறுவது நபி வழிக்கு மாற்றமான கட்டாயம் விட்டுத் தொலைக்க வேண்டிய செயலாகும்.
மன திருப்திக்காக செய்யலாமா..? என்பதுதான் ஷைத்தானுக்கு இடம் கொடுக்கும் வாதமாகும். தெளிவான ஒரு காரியத்திற்கு எதிராக மன ஊசலாட்டங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது.
நோன்பை பொருத்தவரை பஜ்ருக்கு முன்னால் நோன்பு வைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிட வேண்டும் என்று ஹதீஸ் வந்துள்ளது(திர்மிதி) எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல் அமல் அவ்வளவுதான்.

ஒளுவிற்கு பிறகு மனைவியை தொட்டாலோ முத்தமிட்டாலோ ஒளு போகாது ஏனெனில் தொழுகையின் போது நபி அவர்கள் தம் மனைவி ஆயிஷா ரலி அவர்களை தொட்ட விபரமும் அதே போல் ஆய்ஷா அவர்கள் தம் கணவர் நபி அவர்களை தொட்ட விபரமும் புகாரி உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.

கேள்வி: சஹர்வுடைய நேரம் முடிந்த பிறகு நாம் தண்ணீர் குடிக்கலாமா? பவுஜியா,பரங்கிப்பேட்டை.

சஹர் முடியும் நேரம் என்று ஒரு சிலரால் குறிப்பிட்ட நேரம் வரையறுக்கப்பட்டு அந்த நேரங்களையே ஒருசில ஜவுளிக்கடைகள் விளம்பர அட்டைகளில் பிரசுரித்துக் கொடுக்கிறார்கள். உண்மையிலேயே சஹர் முடியும் நேரத்திற்கும், இவர்கள் தொழுது கொண்ட நேரங்களுக்கும் மிகுந்த வேறுபாடுண்டு.

சுபுஹு தொழுகைக்கு பாங்கு சொல்லி முடியும்வரை சஹர் செய்ய ஹதீஸ்களில் ஆதாரம் உண்டு. சுபுஹு தொழுகைக்காக உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை சஹர் உணவை உண்ண நபி (ஸல்) ஏவியுள்ளார்கள். உம்மி மக்தூம் (ரலி) (சுபுஹுக்காக) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் என்பது நபி மொழி . அறிவிப்பாளர்:ஆய்ஷா(ரலி), (புகாரி,முஸ்லிம்,நஸயி)
நாங்கள் ஸஹர் செய்து விட்டு நபி(ஸல்) அவர்களுடன் தொழுகைக்கு கிளம்புவோம் என்று ஜைத் பின் தாபித் (ரலி) கூறினார்கள். (ஸஹர் முடிவதற்கும்,தொழுகைக்கும் இடைப்பட்ட நேரம் எவ்வளவு என்று கேட்டேன் அதற்கு ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி), புகாரி

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஸஹர் முடிந்து தொழுகை ஆரம்பமாக ஏறத்தாழ பத்து நிமிடங்களே இடைவெளி இருந்தன. நபியுடைய இந்த வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமாக இன்றைய நடைமுறையுள்ளது. ஸஹர் முடிந்து விட்டது என்ற அறிவிப்புக்குப்பின் 20,25 நிமிடங்கள் கழித்தே பாங்கு சொல்லப்படுகிறது, அதன் பின் 15 நிமிடங்கள் கழித்து இகாமத் சொல்லப்படுகிறது. ஆக கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு முன்பே ஸஹரை முடித்து கொள்ள வேண்டும்! என்று போலியான சட்டம் இயற்றி வைத்துள்ளார்கள். இந்த சட்டங்களை அலட்சியப் படுத்தி விட்டு பாங்கு சொல்லும் வரை உண்ணுவோம், பருகுவோம்.

கேள்வி: பெண்கள் நோன்பு வைத்துக் கொண்டு குழந்தைக்குப் பால் கொடுக்கலாமா? தெரியாமல் கொடுத்தால் அதற்கு பரிகாரம் உண்டா? ஷரீஃப்

விளக்கம்: கர்ப்பமுற்ற பெண்ணும் குழந்தைக்குப் பாலூட்டுபவளும் நோன்பு நோற்பது சிரமமென்று கருதினால் அல்லது குழந்தையின் உடல்நலம் கெடும் என்று அஞ்சினால் நோன்பை விட்டு விடலாம். இந்நிலையை விட்டுக் கடந்த பிறகு நோன்பை நிறைவேற்றவேண்டும். (மேலதிக விளக்கம் 'நோன்பு சட்டங்கள், சலுகைகள், பரிகாரம்' என்றக் கட்டுரையில்)

எனவே நோன்பு நோற்பதால் உடல் நலத்திற்கு பிரச்சனை இல்லையெனில் நோன்பு நோற்று குழந்தைகளுக்கு பால் கொடுக்கலாம்.

கேள்வி: ரமளானின் இரவு நேரங்களில் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டு குளிக்காமல் ஸஹர் செய்யலாமா..? இரவு நேரத்தில் குளிப்பதற்கு கஷ்டப்படுவதால் பலர் மனைவியுடன் சேருவதில்லை. குளிக்க வேண்டும் - குளிக்கத் தேவையில்லை என்று இரு கருத்து நிலவுகிறது. எனவே இது சம்பந்தமான தெளிவு வேண்டும். அபுதாபியிலிருந்து சகோ:அப்துர்ரஹ்மான்.

விளக்கம்: மனைவியுடன் சேர்ந்தோ அல்லது தூக்கத்தில் விந்து வெளிபட்டாலோ குளிப்பு கடமையாகிறது. இந்த குளிப்புக்கடமை என்ற சட்டம் தொழுகைக்குறியதாகும். நோன்பிற்கோ இதர நல்ல காரியங்களுக்கோ குளிப்புக் கடமையானவர் குளிக்கவேண்டும் என்று இஸ்லாம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.
'இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்கு தயாரானால் ..(ஒளு செய்து கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை இறைவன் இங்கு விளக்குகிறான்..அதை தொடர்ந்து..) நீங்கள் குளிப்புக் கடமையானவராக இருந்தால் குளித்து சுத்தமாகிக் கொள்ளுங்கள்..என்கிறான்'(பார்க்க,குர்ஆன்:5,6)
எனவே ரமளானில் மனைவியுடன் கூடி குளிப்புக் கடமையானால் அவரோ அவர் மனைவியோ ஸஹருக்கு முன் குளிக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.
'இறை நம்பிக்கையாளர்களே! நோன்பின் இரவுகளில் உங்கள் மனைவியுடன் நீங்கள் உடலுறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.................எனவே (விரும்பினால்) நீங்கள் அவர்களோடு உறவுக் கொண்டு அல்லாஹ் உங்களுக்கு விதித்திருப்பதை தேடிக் கொள்ளுங்கள்......... இன்னும் பஜ்ர் வரை உண்ணுங்கள் பருகுங்கள்.'|(பார்க்க குர்ஆன்:2:187)
இந்த வசனத்தில் உறவு கொள்வது-உண்ணுவது-பருகுவது எல்லாம் பஜ்ர் வரை நீடிக்கலாம் என்று அனுமதியளிக்கிறான் இறைவன். சிலர் சொல்வதுப் போல் உறவுக்குப் பின் குளித்து விட்டுதான் ஸஹர் செய்ய வேண்டும் என்பது சட்டம் என்றால் மூன்று காரியங்களும் பஜ்ர் வரை நீடிக்கலாம் என்று இறைவன் கூறமாட்டான். இந்த வசனத்iதை ஆழமாக சிந்தித்தால் குளிப்புக் கடமையான நிலையிலேயே ஸஹர் செய்யலாம் நோன்பை தொடரலாம் என்பதை விளங்கலாம்.
ஸஹருக்கு அடுத்து பஜ்ர் தொழுகை இருப்பதால் - தொழுகைக்கு குளிப்பு அவசியம் என்பதால்- கட்டாயம் குளிக்க வேண்டும். இது தொழுகைக்கான குளிப்புத்தானே தவிர நோன்புக்குறியதல்ல என்பதை கவனத்தில் வைக்க வேண்டும்.
நபி-ஸல்-அவர்களும் குளிப்புக் கடமையான நிலையில் ஸஹர் செய்து நோன்பை தொடர்ந்துள்ளார்கள். இதற்குரிய ஆதாரம் புகாரி-முஸ்லிம் உட்பட பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.

கேள்வி: வெள்ளிக்கிழமைகளில் நஃபிலான நோன்பு வைக்க தடை உண்டா?. ஆம் எனில் பிறகு எந்த நாட்களில் வைக்க வேண்டும்? ஷஃபிகுர் ரஹ்மான்.

வெள்ளிக்கிழமைகளில் நஃபிலான நோன்பு வைக்க ஹதீஸ்களில் தடை இருப்பது உண்மைதான்.

'நான் வெள்ளிக்கிழமை நோன்பு வைத்திருந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். 'நேற்று நோன்பு வைத்தாயா? என்றார்கள். 'இல்லை' என்றேன். 'நாளை நோன்பு வைக்கப்போகிறாயா?. என்றார்கள். 'இல்லை' என்றேன். 'அப்படியானால் நோன்பை முறித்துவிடு' என்றார்கள். நான் நோன்பை முறித்து விட்டேன் என ஜூவைரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அலி(ரலி), ஜாபிர்(ரலி), ஜூனாதா(ரலி), அனஸ்(ரலி), அபூஹூரைரா(ரலி) ஆகிய நபித்தோழர்கள் மூலமாகவும் 'வெள்ளிக் கிழமைகளில் நோன்பு தடைசெய்யப்பட்ட செய்தி வந்துள்ளது. (புஹாரியில் உள்ள ஹதீஸ் எண்: 1984, 1986, 1986, - திர்மிதி - 740)


வெள்ளிக்கிழமையை எப்படி சிறப்பிக்க வேண்டுமோ, அப்படி சிறப்பித்து விட்டான். அந்த சிறப்பின் காரணமாக அன்றைய தினம் நோன்பு வைத்தால் நன்மை அதிகம் என்ற நாமாக அதை தனிமைப் படுத்தக் கூடாது என்பதால் இந்த தடை வந்திருக்கலாம். வியாழன் - வெள்ளி, அல்லது வெள்ளி - சனி, என இரண்டு நாட்கள் சேர்ந்தார்போல் நோன்பு வைக்க ஹதீஸ்களில் ஆதாரம் உண்டு.

ஒவ்வொரு மாதமும் 13,14,15 ஆகிய பிறை நாட்களில் நோன்பு வைப்பதற்கும், வார நாட்களில் திங்கள், வியாழன் ஆகிய நாட்களில் நோன்பு வைப்பதற்கும் புஹாரி, முஸ்லிம், திர்மிதி ஆகிய ஹதீஸ் நூல்களில் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

கேள்வி - நோன்பு காலத்தில் இரவில் மனைவியுடன் உடல் உறவு கொண்டு விட்டு ஒலு செய்து விட்டு துங்கி விட்டோம் எழுந்திருக்கும்போது பாங்கு சொல்லி விட்டார்கள் பிறகு எழுந்திருத்து குளித்து விட்டு நிய்யத் செய்ய நாடினேன் ஆனால் பிரயாணத்தில் வந்து விட்டு அன்று மாலை திரும்புவதால் பிரயாணக்களைப்பில் இருப்பீர்கள் ஆகையால் களா செய்து கொள்ளாலாம் என்று என் மனைவி சொல்ல களைப்பின் காரணமாக அந்த நோன்பை களா செய்து ஆறு நோன்பில் வைத்தேன் சரியா விபரம் தேவை. மெய்தீன் - யாஹூ மெயில் வழியாக

பிரயாணிகளும் நோயாளிகளும் நோன்பை களா செய்யலாம் என்று அனுமதியுள்ளது. (பார்க்க அல் குர்ஆன் 2:184,185) ஒருவர் உள்ளுர் திரும்பிய பிறகு அவர் பிரயாணியாக கருதப்பட மாட்டார் எனவே பிரயாணிக்குரிய சலுகை இவருக்குப் பொருந்தாது. நோன்பு நோற்க வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இருக்கும் போது உங்கள் மனைவி பிரயாண களைப்பை காரணம் காட்டி இருக்க வேண்டிய அவசியமில்லை. நோன்பு வைக்க முடியாத அளவிற்கு உங்கள் உடம்பு களைப்படைந்திருந்தால் இறைவன் அதை மிக்க அறிந்தவனாக இருப்பதால் கவலைப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. பிறகு களா செய்தது சரிதான். பாங்கு சொன்ன பிறகு குளித்து விட்டு நிய்யத் செய்ய நாடியதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

குளிப்பு கடமையான நிலையிலேயே நோன்பிற்குரிய நிய்யத்தை மனதில் எண்ணிக் கொள்ளலாம் எந்த பிரச்சனையும் இல்லை. குளிப்பு கடமையானவர்கள் நோன்பு நோற்கக் கூடாது நிய்யத் செய்யக் கூடாது என்று எந்த தடையும் இஸ்லாத்தில் இல்லை. நபி(ஸல்) குளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்றுள்ளார்கள். (புகாரி 1931,1932)

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கடமையான நோன்பிற்குரிய நிய்யத்தை நாம் நினைத்த நேரமெல்லாம் எண்ணிக் கொள்ள முடியாது. பஜ்ருக்கு முன்பே அந்த எண்ணம் நம்மிடம் வந்து விட வேண்டும்.

எவர் பஜ்ருக்கு முன்பு நோன்பு நோற்க முடிவு செய்யவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை என்பது நபிமொழி (ஹப்ஸா(ரலி) திர்மிதி 662)

எனவே மனைவியுடன் குடும்ப வாழ்வில் இணைபவர்களாக இருந்தாலும் 'காலையில் எழ முடியாவிட்டாலும் நோன்பை தொடர வேண்டும்' என்ற எண்ணத்தில் இருந்து விட்டால் அவர்கள் நோன்பைத் தொடரலாம். எழுந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாக இருந்து விட்டு பஜ்ருக்கு பிறகு எழுந்து நோன்பு நோற்க எண்ணினால் அது அன்றைய தினத்திற்குறிய நோன்பில் சேராது. பின்னர் அதை களா செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டு விடும்.

கேள்வி - நோன்பு காலங்களில் குர்ஆன் ஓதுவதை கட்டாயம் செய்ய வேண்டுமா... குர்ஆன் ஒதத் தெரியாதவர்களின் நிலை என்ன விளக்கவும். இப்ராஹீம் - ஹாட் மெயில் வழியாக.

நோன்பு காலங்களில் மட்டுமல்ல முஸ்லிம்கள் எந்த நேரத்திலும் குர்ஆனுடன் தொடர்பு உள்ளவர்களாகவே இருக்க வேண்டும். குர்ஆன் இறங்கியதால் தான் ரமளான் என்ற ஒரு மாதமும் அதில் லைலதுல் கத்ர் என்ற ஒரு இரவும் மிக சிறப்புப் பெற்றுள்ளது. எதன் வெளிப்பாட்டால் ரமளான் சிறப்புப் பெற்றதோ அந்த குர்ஆனுடன் நாம் அதிகமாக ஐக்கியமாவதின் மூலம் தான் ரமளானை சிறப்பிக்க முடியும். குர்ஆன் ஓதத் தெரியாதவர்கள் என்றெல்லாம் தட்டிக் கழிப்பது அறிவுடமையல்ல. முயற்சி செய்தால் கண்டிப்பாக குர்ஆன் ஓத முடியும். உண்மையிலேயே ஓத முடியாவிட்டாலும் முயற்சி செய்தால் அந்த முயற்சிக்கு இறைவன் கூலி கொடுப்பான்.

கேள்வி - நோன்பாளிகள் நறுமணம் பூசிக் கொள்ளலாமா..சென்ட் ஸ்ப்ரே இவைகளைப் பயன் படுத்தலாமா.. குவைத்திலிருந்து யூசுப் - ஹாட்மெயில் வழியாக.

உண்ணுவது - பருகுவது - உடலுறவுக் கொள்வது போன்ற காரியங்களுக்கு மட்டுமே தடை வந்துள்ளது. அந்த முயற்சிகலோ - அது சார்ந்த முயற்சிகளிலோ ஈடுபடக் கூடாது. அதுவல்லாத செயல்களுக்குத் தடையில்லை. மணம் பூசிக் கொள்வது - பவுடர் போட்டுக் கொள்வது - எண்ணைய் தேய்த்துக் கொள்வது - விக்ஸ் - டைகர்பாம் - தைலம் போன்றவற்றை தேவைக்கு பயன்படத்துவது இவற்றிர்க்கெல்லாம் தடை எதுவுமில்லை.

கேள்வி : எனக்கு மாதவிடாய் சரியாக வருவதில்லை. சில சமயம் 15 - 20நாட்கள் நாட்கள் வரை வருகிறது. இந்நிலையில் நான் எப்படி ரமளான் நோன்பை நோற்க முடியும்? சகோதரி கதீஜா - எமிரட்ஸ் மெயிலில்.

உங்கள் கேள்வியில் தெளிவு இல்லை. சரியாக வருவதில்லை என்று கூறிவிட்டு 15 - 20 நாட்கள் நீடிக்கிறது என்றும் குறிப்பட்டுள்ளீர்கள். இது போன்ற பிரச்சனைகளுக்கு கேள்வி ஒழுங்காக கிடைத்தால்தான் சட்டங்களை தெளிவாக பெற முடியும். உங்களுக்கு இது நீண்ட காலபிரச்சனையா என்றும் தெரியவில்லை.

இப்படி ஒரு பிரச்சனை ஏற்படுவதற்கு முன் மாதாமாதம் உங்களுக்கு 1 முதல் 6 நாட்கள் வரை மாதவிடாய் வந்துக் கொண்டிருந்தால் அதுதான் உங்களின் வழக்கமான மாதவிலக்கு நாட்களாகும். சிலருக்கு 3 நாட்கள், சிலருக்கு 5 நாட்கள் 7நாட்கள் மிக அபூர்வமாக சில பெண்களுக்கு 15 நாட்கள் வரைக்கூட மாதவிலக்கு வரும். நாட்கள் மாறாமல், கூடுதல் குறைவு இல்லாமல் ஒரு பெண்ணுக்கு இயல்பாக எத்துனை நாட்கள் மாதவிலக்கு வந்தாலும் அந்த பெண்ணை பொருத்தவரை அது மாத விலக்கு தான்.

உதாரணமாக ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் 20ம் தேதி துவங்கும் மாதவிலக்கு மாத கடைசி வரை (அதாவது 10 நாட்கள்)நீடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒவ்வொரு மாதமும் இதுதான் வழமையாக உள்ளது. நாட்கள் மாறுவதும் இல்லை, 10நாட்கள் என்பது 12 நாட்களாக கூடுவதோ 8 நாட்களாக குறைவதோ இல்லை என்றால் அந்த பெண்ணின் மாதவிலக்கு நாட்கள் 10 தான் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. அந்த பெண்ணை பொருத்தவரை அது குறைப்பாடும் அல்ல. அந்த பத்து நாட்களில் அந்த பெண் தொழக் கூடாது - நோன்பு வைக்கக் கூடாது. நோன்பை பின்னர் வைத்துக் கொள்ளலாம்.

இதற்கு மாற்றமாக ஒழுங்கீனமாக இப்படியும் - அப்படியுமாக மாறி -மாறி மாதவிலக்கை உணரும் பெண்கள் அதை பரிசீலிக்கத்தான் வேண்டும்.

மாதந்தோரும் 3 நாட்களோ - 5 நாட்களோ மதவிலக்கு வரும் பெண்ணுக்கு திடீரென்று அதற்கு மேற்பட்ட நாட்களும் நீடிக்கிறது என்றால் வழமையாக வரும் நாட்களை மட்டும் தான் மாதவிலக்கு நாட்களாக அந்தப் பெண் கணக்கெடுக்க வேண்டும். மேற்கொண்டு நீடிக்கும் நாட்கள் மாதவிலக்கு நாட்களில் அடங்காது.

நரம்பு கோளாரின் காரணமாக தொடர்ச்சியான இரத்தப் போக்கு ஏற்படலாம். அப்படி ஏற்படும் இரத்தப் போக்கிற்கும் மாதவிடாய்க்கும் சம்பந்தமில்லை.

மாதவிடாய் என்பது ஒரு நோயல்ல ஆனால் உதிரப்போக்கு என்பது நரம்பு நோய். வெளியேறும் இரத்தத்தின் தன்மையை வைத்துக் கூட இதை தெரிந்துக் கொள்ள முடியும். கரு முட்டை சிதைவினால் ஏற்படும் மாதவிடாய் இரத்தம் கருத்த சிவப்பில் அடர்த்தியாக இருக்கும். முடியும் தருவாயில் மஞ்சல் நிறமாகி விடும். அதன் வாடையும் வேறுவிதமாக இருக்கும். நரம்பு பிரச்சனையால் ஏற்படும் இரத்தப் போக்கிற்கு இந்த தன்மை இருக்காது.

எனவே மாதவிலக்கு அல்லாத இரத்தப் போக்கை காணும் பெண்கள் நோன்பையோ தொழுகையையோ விட்டுவிட அனுமதி இல்லை.

இறைத் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் இதுபற்றியெல்லாம் பெண்கள் கேட்டு தெளிவு பெற்றுள்ளனர்.

'(மாதவிலக்கு அல்லாத நாட்களில் வெளிப்படும் மஞ்சல் நிற இரத்தத்தையும், மண் நிறத்து இரத்தத்தையும் நாங்கள் மாதவிலக்காக முடிவு பண்ண மாட்டோம்' என்று நபித்தோழியான உம்மு அத்திய்யா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாடம் மாவிடாய், எண் 326)

மாதவிலக்கு - இரத்தப் போக்கு சட்டங்கள்.

எனக்கு அடிக்கடி கடுமையான இரத்தப் போக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. இதுபற்றி சட்டத்தை தெரிந்துக் கொள்ள நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். 'இது ஒரு நரம்பு நோயாகும். ஆறு அல்லது ஏழு நாட்களை மாதவிலக்கு நாளாக கருதிக் கொள். பின்னர் குளித்து 23 அல்லது 24 நாட்கள் தொழு, நோன்பும் வை இது உனக்கு போதுமானதாகி விடும். மற்றப் பெண்கள் மாதவிடாய் காலத்தை எப்படி கழிக்கிறார்களோ அது போன்று ஒவ்வொரு மாதமும் செய்துக் கொள்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (ஜைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) திர்மிதி 118, அபூதாவூத், அஹ்மத்)

தொடர் இரத்தப் போக்கு அல்லது நாட்கள் நீடித்துக் கொண்டு போகுதல் போன்ற அறிகுறித் தென்படுபவர்கள் இந்த செய்தி அடிப்படையில் தன் அமல்களை அமைத்துக் கொள்ள வேண்டும்

வழக்கமான மாதவிலக்கு நாட்கள் போக மீதியுள்ள நாட்களில் கீழாடையை இறுக்கமாக்கிக் கொண்டு - இரத்தம் வெளிப்படும் நிலையிலேயே நோன்பை வைத்துவிட வேண்டியது தான். தொழுகைக்கும் இதுதான் சட்டம்.

கேள்வி - நோன்பு வைத்துக் கொண்டு ஆற்றிலி மூழ்கி குளிக்கலாமா... முஹம்மத் ஜஃப்ரி - யாஹூ மெயில் வழியாக.

ஆற்றிலி மூழ்கி குளிக்க தடையில்லை ஆனால் வாய் வழியாக தண்ணீர் உள்ளே சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

கேள்வி - வருடா வருடம் நோன்பில் கடைசி பத்து நாட்களில் ஊரார்களை அழைத்து இஃப்த்தார் பார்ட்டி என்று ஏழைகள் அல்லாதவர்களுக்கு கொடுக்கும் விருந்து அல்லாஹ்வுக்கு பிடித்தமான செயல்தானா? இதற்கு விளக்கம் தேவை. nizous@hotmail.com

மனமகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய விருந்தாக இருக்கட்டும், நன்மையை எதிர்பார்த்துக் கொடுக்கக் கூடிய இது போன்ற விருந்தாகட்டும் எந்த விருந்திலும் ஏழைகள் புறக்கணிக்கப்படக் கூடாது என்பது இஸ்லாம் சொல்லும் அறிவுரை. அவ்வாறு புறக்கணிக்கபட்டால் அது கெட்ட விருந்தாகவே முடியும் என்றும் நபிமொழி எச்சரிக்கிறது.

பணக்காரர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்துதான் விருந்துக்களிலேயே மிகக் கெட்டது என்பது நபிமொழி. (அபூஹூரைரா(ரலி) புகாரி1577)

விருந்துக்களில் பரிமாறப்படும் உணவு வகைகளுக்கு பணக்காரர்கள் என்றுமே ஏங்குவதில்லை. ஏனெனில் அவர்களிடம் பணம் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் விரும்பிய உணவை அவர்களால் உண்ண முடியும். ஏழைகளை பொருத்தவரை இது போன்ற உணவுகளுக்கு அவர்களின் உள்ளம் ஏங்கத்தான் செய்யும். திருமணம் உட்பட இது போன்ற விருந்துக் காலங்களில் தமக்கும் அழைப்பு வந்தால் சென்று கலந்துக் கொள்ளலாமே.. என்று அவர்களின் உள்ளம் வெளிப்படுத்தும் ஆசையில் எந்தத் தவறும் இருக்க முடியாது.

எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாக்கப்பட்டவர்களை புறக்கணித்து எதிர்ப்பார்ப்பே இல்லாதவர்களை அழைத்து விருந்து கொடுக்கும் நடை முறைதான் பரவலாக இருந்து வருகின்றது. இத்தகைய விருந்து பகட்டுக்காகவோ - பெருமைக்காகவோ வழங்கப்படும் விருந்தாகத்தான் இருக்க முடியும். வயிற்றுப்பசியுடன் இருக்கும் ஏழைப் புறக்கணிக்கப்பட்டு பசி என்றால் என்னவென்றே தெரியாதவர்களை அழைத்து விருந்தளிக்கும் போது அது கெட்ட விருந்தாகவே முடியும் என்ற நபியின் வார்த்தை எத்துனை அர்த்தம் வாய்ந்தது என்பதை நம்மால் உணர்ந்துக் கொள்ள முடிகின்றது.

எனவே ஏழைகள் புறக்கணிக்கப்பட்டு பகட்டுக்காக நடத்தப்படும் எந்த விருந்தும் அல்லாஹ்வின் அன்பைப் பெற்றுத் தருவதாக அமையவே அமையாது.

கேள்வி - என்பெயர் நாசர் நான் குவைத்தில் வசிக்கிறேன். என் கேள்வி நோன்பு வைத்துக் கெண்டு மருத்துவர் இடம் ஊசி போட்டு கொள்ளலாமா?. உடம்பில் அடிபட்டு விட்டால் காயத்துடன் மருந்தும் தையலும் போடலாமா?. n_007201 at yahoodotcodotin

உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;. எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் நோன்பை சிரமமாகக் கருதினால்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. (அல் குர்ஆன் 2: 184 - 185)

இந்த வசனம் இரு சாராருக்கு சலுகையை முன் வைக்கிறது.

1) நோயாளிகள். 2) பிரயாணிகள்.

இவர்கள் நோயின் காரணமாகவோ - பிரயாணத்தின் காரணமாகவோ நோன்பை விட்டு விடலாம். பின்வரும் காலங்களில் அதை நோற்று பூர்த்தி செய்து விட வேண்டும்.

நோயாளி நோன்பை விட்டு விடலாம் என்பது எதை குறிக்கிறது?

பொதுவாக நோயாளி என்று இங்கு குறிப்பிடப்படுவதால் அனைத்து நோயையும் இது கட்டுப்படுத்தத்தான் செய்யும். இருப்பினும் நோய் என்றவுடன் நோன்பை விட்டு விடலாமா... என்று சிந்திக்கும் போது ஒரு அழுத்தம் இந்த வசனத்தில் இருப்பதை உணரலாம். அதாவது நோயாளி நோன்பை விட்டு விடலாம் என்பதிலிருந்து அவர் நோன்பு வைக்க முடியாத அளவிற்கு நோயாளியாக இருக்க வேண்டும் என்பது விளங்குகிறது.

தலைவலி என்பதும் - கண்வலி - கால் வலி போன்ற வலிகளும் நோய்தான் என்றாலும் இத்தகையோர் நோன்பு வைக்காமலிருக்கலாம் என்று முடிவு செய்வதில் எந்த நியாயமுமில்லை ஏனெனில் நோன்பால் இவர்கள் பாதிக்கப்படப் போவதில்லை. இவர்கள் தலைவலிக்கு மருந்து தடவிக் கொண்டு - கண்வலிக்கு கண்களில் சொட்டு மருந்து இட்டுக் கொண்டு நோன்பைத் தொடலாம்.

காலில் அடிப்பட்டு ஒருவர் கட்டுப்போட்டுள்ளார் - ஒருவர் ஆணிக்கால் நோயால் அவதிப்படுகிறார் என்றால் இத்தகைய நோயுக்கும் நோன்பிற்கும் சம்பந்தமில்லை. இவர்கள் மருத்துவம் செய்து கொள்ளும் நிலையில் நோன்பைத் தொடலாம்.

ஒருவருக்கு அடிப்பட்டு காயம் ஏற்பட்டு விட்டது இதனால் அவருக்கு எத்தகைய இரத்த இழப்பும் (இதனால் அவருக்கு அதிகப்படியாக வெளியேறிக் கொண்டிருக்கவில்லை) ஏற்படவில்லை என்றால் அவர் தையல் போட்டுக் கொண்டு நோன்பைத் தொடரலாம். இரத்தம் அதிகமாக வெளியேறி இருந்தால் - இரத்தம் தேவைப்படும் நிலையில் அவர் இருந்தால் - 'நான் நோன்பு வைத்துக் கொள்ளும் நிலையில் இரத்தம் ஏற்றிக் கொள்கிறேன்' என்று சொல்லக் கூடாது. இவர் நோன்பு வைக்க முடியாத நோயாளியாகவே கருதப்படுவார். ஏனெனில் நோன்பாளி இரத்தம் குத்தி எடுப்பதை (இன்றைக்கு இதுதான் இரத்த தானம்) நபி(ஸல்) தடுத்துள்ளார்கள். நோன்பாளி பலவீனப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறு தடுத்தார்கள் என்று நபித் தோழர் அறிவிக்கிறார்.

'நபி(ஸல்) அவர்கள் காலத்தில் ''நோன்பாளி இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வதை நீங்கள் வெறுத்து வந்தீர்களா?' என்று அனஸ் இப்னு மாலிக்(ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, 'இல்லை! ஆயினும், (நாங்கள் அதை வெறுத்தது) பலவீனம் ஏற்படும் என்பதற்காகவே!'' என்று அவர்கள் பதிலளித்தார்கள். (புகாரி - 1940)

பலவீனப்பட மாட்டோம் என்ற நம்பிக்கையுள்ளவர்கள் இரத்தம் கொடுக்கலாம் என்றாலும் ஏற்கனவே அடிப்பட்டு இரத்த இழப்பிற்கு ஆளானவர் பலவீனமற்றவராக இருப்பார் என்று கருத முடியாது. அவருக்கு இரத்தம் தேவைப்படும் நிலையிலிருந்தால் அவர் நோன்பு வைக்க முடியாத நோயாளியாகவே கருதப்படுவார். இரத்தம் ஏற்றப்பட்டு உடல் ஆரோக்ய நிலையைப் பெற்ற பின் தான் அவர் நோன்பு வைக்க வேண்டும்.

உண்ணக் கூடாது, பருகக் கூடாது, உடலுறவு கொள்ளக் கூடாது என்றத் தடையே வந்துள்ளது. இதிலிருந்து வாய் வழியாக வயிற்றை அடையும் எதுவும் நோன்பை முறித்து விடும் என்பதால் வாய் வழியாக உட் கொள்ளும் மாத்திரை - டானிக் போன்ற மருந்துகளை நோன்பாளி பயன்படுத்தக் கூடாது. ஊசி என்பது வாய்வழியாக உட்கொள்ளும் பொருளல்ல. ஊசி வழியாக ஏற்றப்படும் மருந்து வயிற்றை சென்று அடையப்போவதுமில்லை. அது நரம்பு மண்டல வழியாக நேரடியாக இரத்தத்தில் கலப்பதாகும். எனவே நோன்பாளி நோயாளியாக இருந்தால் அவர் ஊசி வழியாக மருத்துவம் செய்து கொண்டால் அவரது நோன்பு முறியாது. இந்த சந்தர்பத்தில் இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் செய்யும் மருத்துவம் நோயிக்குரியதாக இருக்க வேண்டுமே தவிர உடல் ஆரோக்யத்திற்காக நோன்பு வைத்துக் கொண்டு மருத்துவம் செய்துக் கொள்ளக் கூடாது. உதாரணமாக நோன்பு வைத்திருக்கும் நிலையில் நோன்பாளி பலவீனப்படுவார் என்பது நாம் அறிந்ததே.. நோன்பாளி ஒருவர் தம் பலவீனத்தைப் போக்கிக் கொள்ள 'நான் ஒரு பாட்டில் குளுகோஸ் ஏற்றிக் கொள்கிறேன் - இது நரம்பு வழியாகத்தான் உள்ளே போகிறது' என்று முடிவெடுப்பாரேயானால் அது மருத்துவத்தில் அடங்காது. ஏனெனில் நோன்பாளி பலவீனப்படுவது நோன்பிற்குரிய இயல்பாகும். அது நோயல்ல என்பதால் அவர் செய்வதும் மருத்துவமாகாது. எனவே நோன்பாளி அவசியத்திற்காக நோன்பு வைத்துக் கொண்ட நிலையில் மருத்துவம் செய்து கொள்ளலாம்.

கேள்வி - நோன்பு காலங்களில் ஒரு பர்ளுக்காக 70 பர்ளுகளுடைய நன்மையும் ஒரு சுன்னத்துக்காக ஒரு பர்ளுடைய நன்மையும் வழங்கப்படுவதாக இஸ்லாம் கூறுகின்றது. எனவே நோன்பு காலங்களில் தொழுவதற்கும் பின்வரும் காலங்களில் பழக்கப்படுத்திக் கொள்வதற்கும் சுன்னத்தான தொழுகைகள் மற்றும் அவற்றிற்கான நன்மைகள் தொடர்பாக குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் விளக்கமாக குறிப்பிடுவீர்களா? ilysjan at yahoodotcom
நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல் ஒரு பர்ளுக்கு எழுபது பர்ளுடைய நன்மை என்றோ - ஒரு சுன்னத்துக்கு ஒரு பர்ளுடைய நன்மை என்றோ எந்த ஆதாரத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை.

நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலி கொடுகின்றேன். ஒரு நன்மைக்கு பத்து மடங்கு நன்மை கொடுக்கப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். - (அபூஹூரைரா(ரலி) - புகாரி 1894)

ஒன்றுக்கு பத்து என்பது பொதுவாக எல்லா நன்மைகளுக்கும் உரியதாகும். (சில அறிவிப்புகளில் எழுநூறு வரை என்று கூறப்பட்டுள்ளது) ஆனால் ஒரு சுன்னத்துக்கு ஒரு பர்ளுடைய நன்மை என்பதை காண முடியவில்லை.

சுன்னத்தான தொழுகைகளைப் பற்றி இப்போது விரிவாக வெளியிட முடியாது. தொழுகைப் பற்றிய கேள்வி பதில் தொகுப்பு வெளியிடப் போகிறோம். சந்தேகங்களை எழுதுங்கள் என்று அறிவிப்பு செய்திருந்தோம். அப்போதே நீங்கள் சுன்னத் தொழுகைகளைப் பற்றி கேட்டிருக்க வேண்டும். இது நோன்பு பற்றிய தொகுப்பாகும். எனவே பிரிதொரு சந்தர்பத்தில் தான் உங்களின் இந்தக் கேள்விக்கான விரிவான பதில் கிடைக்கும்.

கேள்வி - நோன்பிற்கு ஒவ்வொரு நாளும் நிய்யத் வைப்பது அவசியமா? அல்லது முதல் நோன்பின் போது நிய்யத் வைத்தால் முழு மாதத்திற்கும் அது போதுமானதாகுமா? fsen at netscapedot.net

எவர் பஜ்ருக்கு முன்பு நோன்பு நோற்க முடிவு செய்யவில்லையோ அவருக்கு நோன்பு இல்லை என்பது நபிமொழி (ஹப்ஸா(ரலி) திர்மிதி 662)

ரமளான் மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும் என்று இறைவன் கூறியுள்ளதிலிருந்து அந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்க வேண்டும் என்ற எண்ணம் ஒருவரிடம் வந்து விட வேண்டும் என்பது தெரிகிறது. 'இந்த மாதம் முழுதும் நோன்பு நோற்க வேண்டும்' என்று ஒருவர் மனதில் முடிவு செய்தால் அதுவே முழு நோன்பிற்குரிய நிய்யத் ஆகி விடும் என்றாலும் ஒருமாதம் என்பதால் இடையில் நோய் - பிரயாணம் இன்னபிற காரணங்கள் குறுக்கிட்டு நோன்பு வைக்க முடியாத சூழல் உருவாகலாம் என்பதால் தான் சூழ்நிலையை அனுசரித்து 'பஜ்ருக்கு முன்' நோன்பிற்கான எண்ணம் வர வேண்டும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். எனவே தினமும் அந்த எண்ணம் நம் மனதில் உதிக்க வேண்டும் என்பதுதான் சரியாகும்.

நோன்பாளி பேஸ்ட் உபயோகிக்கலாம்.

நோன்புக் காலங்களில் வாயை சுத்தம் செய்யலாமா.. என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படுவதுண்டு. சிலர் நோன்பின் காரணத்தால் வாயை சுத்தம் செய்யக் கூடாது என்றும் அவ்வாறு செய்வது நோன்பை பாதிக்கும் என்றும் விளங்கிக் கொண்டு வாயில் கை வைக்காமல் இருப்பார்கள். தொழுகையின் போது சரியாக வாய் கூட கொப்பளிக்க மாட்டர்கள். இது தவறான முடிவாகும். நோன்புக் காலங்களில் வாயை சுத்தம் செய்யக் கூடாது என்ற தடையும் இல்லை.

இன்னும சொல்லப் போனால் நோன்புக் காலங்களில் இன்னும் கூடுதலாக வாயை சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில் நோன்புக் காலங்களில் எதுவும் சாப்பிடாமல் இருக்கும் போது வாய் வாடை அதிகமாக வர வாய்ப்புள்ளது. இந்த வாடை பிற மனிதர்களை பாதிப்பதோடு மட்டுமல்லாமல் வானவர்களைக் கூட பாதிக்கக் கூடியதாக இருக்கிறது.

எந்த வாடையால் மனிதர்கள் பாதிக்கப்படுவார்களோ அதே போல மலக்குகளும் பாதிக்கப்படுவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் 'வெங்காயம் பூண்டை பச்சையாக சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு வருபவர்களை எச்சரித்த போது கூறியுள்ளார்கள் (முஸ்லிம்)

''நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்றிருக்கும்போது பல் துலக்குவதை எண்ணிலடங்காத முறை பார்த்திருக்கிறேன்!' என்று ஆமிர் இப்னு ரபீஆ(ரலி) கூறினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

''என்னுடைய சமுதாயத்திற்கு நான் சிரமம் தந்தவனாக ஆம்விடுவேன் என்ற அச்சம் (எனக்கு) இல்லாவிட்டால் ஒவ்வொரு உளூவின் போதும் பல் துலக்குமாறு நான் அவர்களுக்கு உத்தரவிட்டிருப்பேன்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) கூறினார். ஜாபிர்(ரலி), ஸைத் இப்னு காலித்(ரலி) ஆகியோர் வழியாகவும் இது போல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் நோன்பாளிக்கு என்று தனிச்சட்டம் எதுவும் கூறப்படவில்லை.

''பல்துலக்குதல் வாயைத் தூய்மைப்படுத்துவதும் இறைவனின் திருப்தியைப் பெற்றுத் தருவதுமாகும்!' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) கூறினார். (இவை அனைத்;தும் புகாரியின் நோன்புப் பாடத்தில் இடம் பெற்றுள்ளது)

நபி(ஸல்) நோன்பு வைத்திருக்கும் போது எண்ணிலடங்கா முறை பல் துலக்கியுள்ளார்கள் என்றால் வாயை தூய்மையாக வைத்துக் கொள்வதில் அவர்கள் எவ்வளவு அக்கறை எடுத்துள்ளார்கள் என்பதை விளங்கலாம்.

பல் துலக்குவதாக இருந்தால் மிஸ்வாக் குச்சியால் துலக்க வேண்டும். பேஸ்ட் போட்டு விளக்கக் கூடாது ஏனெனில் பேஸ்டின் சுவையை வாய் உணர்கிறது என்றெல்லாம் சிலர் கூறுவது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும்.

பேஸ்ட்டால் பல்துலக்கும் போது வாய் உணரும் வாசனையையும் புத்துணர்வையும் புதிய மிஸ்வாக்கால் பல்துலக்கும் போதும் வாய் உணரத்தான் செய்யும்;. அவ்வளவு ஏன் தண்ணீரால் வாய் கொப்பளிக்கும் போது தண்ணீரின் சுவையைக் கூட வாய் உணரத்தான் செய்கின்றது. அதற்காக வாயே கொப்பளிக்கக் கூடாது என்று சொல்லி விடலாமா...? என்றெல்லாம் இவர்கள் சிந்திப்பதில்லை. எனவே நோன்பாளி பேஸ்ட் இட்டு பல் துலக்க எந்த தடையுமில்லை என்பதை நாம் விளங்கலாம்.

வாய் துற்வாடையை போக்க இப்போது 'ஸ்ப்ரே' வந்து விட்டது (மேற்கத்திய மோகம்) நோன்பாளி ஸ்ப்ரே பண்ணலாமா... என்ற சந்தேகத்தை எடுத்துக் கொண்டால் இதில் கவனம் தேவை ஏனெனில் ஸ்ப்ரே பண்ணும் போது அது தொண்டையைக் கடந்து விட வாய்ப்புள்ளது. அது நோன்பைப் பாழ்படுத்தி விடும் என்பதால் அதை உபயோகிக்காமல் இருப்பது தான் நல்லது.

இன்னுமொரு ஆட்சேபனை.


முஹம்மதின் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விட விருப்பமானதாகும். (அபூஹூரைரா(ரலி) புகாரி 1904)

இந்த ஹதீஸை சிலர் எடுத்துக் காட்டி 'சிறப்பு மிக்க' அந்த வாடையை மாற்றக் கூடாது என்று வாதிப்பதையும் பரவலாகப் பார்க்கலாம்.

இவர்கள் விளங்குவதுதான் அந்த ஹதீஸூக்கு அர்த்தம் என்றால் நபி(ஸல்) நோன்புக் காலங்களில் பல் துலக்கி இருக்கவே மாட்டார்கள் என்ற சாதாரண விளக்கத்தைக் கூட புரிந்துக் கொள்ளாதவர்கள் இவர்கள்.

'அல்லாஹ்விடத்தில் சிறப்புக்குரியது' என்றால் அதன் அர்த்தத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். நோன்பு வைப்பதால் வாயில் துர்வாடை வருகிறது என்று நோன்பையோ அதன் வாடையையோ வெறுக்க வேண்டாம். அந்த வாடை அல்லாஹ்விடத்தில் சிறப்புகுரியதாகும் என்பதே அதன் அர்த்தமாகும்.

எனவே தொண்டை வழியாக எதுவும் உள்ளே நுழையாத வகையில் வாயை எத்துனை தூய்மையாக வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதற்காக பேஸ்ட் போன்றவற்றையும் பயன்படுத்தலாம் தடையில்லை.

தொண்டைக்கு செல்லாத வகையில் உப்பு - காரம் போன்றவற்றைக் கூட வாயில் வைத்து சுவையை அறியலாம்.

வாசனை திரவியங்களை பயன்படுத்தலாம்.

பல் துலக்குதவற்குரிய அடிப்படையே இங்கும் பொருந்தி விடும். உண்ணுதல் - பருகுதல் - உடலுறவுக் கொள்ளுதல் ஆகியவைக் கூடாது என்பது நோன்புக்காக விதிக்கப்பட்டுள்ள அடிப்படை சட்டமாகும். ஒருவர் வாசனை திரவியங்களை பயன்படுத்தும் போது 'கூடாது' என்று தடுக்கப்பட்ட எதுவும் அங்கு நிகழவில்லை என்பதால் அவற்றைப் பயன்படுத்தலாம் ஆனால் வாசனைப் பொருளை மூக்கின் வழியாக நுகரும் போது இதிலிருந்து எதுவும் (துகல்கள் - ஸ்ப்ரேயில் பயன்படுத்தப்பட்டுள்ள இதர பொருள்கள்) வயிற்றுக்கு சென்று விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 'நோன்பாளி மூக்கிற்கு தீவிரமாக தண்ணீர் செலுத்தாமல் இருக்கட்டும்' என்ற ஹதீஸை நாம் இங்கு பொருத்திக் கொள்ள வேண்டும்.

நன்றி: http://www.tamilmuslim.com