ஒலிம்பிக் ஆச்சரியங்கள்…!




`ஒலிம்பிக்’ – உலகில் உள்ள அனைத்து விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல… விளையாட்டு ரசிகர்களுக்கும் ஓர் கனவு. அங்கே ஆச்சரியங்களுக்கு பஞ்சமில்லை. அப்படி அரங்கேறிய ஆச்சரியங்களை இங்கே பார்ப்போம். 1900-ம் ஆண்டில் பாரிசில் நடந்த ஒலிம்பிக் தொடரில் மைதானங்கள் மிகவும் சிறியதாக அமைக்கப் பட்டிருந்தன. இந்த சிறிய மைதானத்தில் வட்டு எறிதல் போட்டியில் வீரர்கள் எறிந்த வட்டுகள், அங்கிருந்த மரத்தில் சிக்கிக் கொண்டன. தங்கம் வென்ற ஹங்கேரி வீரர் டால்ப் போயர் எறிந்த வட்டு முன்று வாய்ப்புகளிலும் ரசிகர்கள் அமர்ந்திருந்த அரங்கத்தில் விழுந்தது. இதனால் ரசிகர்கள் கூடுதல் கவனத்தோடும், அச்சத்தோடும் அமர்ந்திருந்தனர். அதே ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தைப் போட்டி அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது அம்பு எய்த வேண்டிய இலக்கு எது தெரியுமா? உயிருடன் பறக்கும் புறாதான்! சரியாக அம்பை எய்து புறாவை கீழே விழச் செய்தால் தங்கம் கிடைக்கும்! 1912-ம் ஆண்டு ஸ்டாக்ஹோம் ஒலிம்பிக் மராத்தானில் பங்கேற்ற ஜப்பான் வீரர் கனிகுரி பாதியிலேயே வீட்டுக்கு திரும்பினார். இதற்கான காரணத்தையும் கூற மறுத்துவிட்டார். ஏறக்குறைய ஐம்பதாண்டுகளுக்கு பிறகு அதற்கான காரணத்தை கூறினார். மாரத்தானில் ஓடிக் கொண் டிருந்தபோது பார்வையாளர் ஒருவர் கொடுத்த உற்சாக பானத்தை குடித்துள்ளார். இதனால் தாம் விதிமுறையை மீறிவிட்டோமோ என்ற பயத்தில் டிராம் வண்டியில் ஏறி வீட்டுக்கு போய்விட்டாராம்! 1904-ம் ஆண்டு செயின்ட் லூயிசில் நடந்த ஒலிம்பிக் நீச்சல் போட்டிகள் ஏரியில் நடத்தப்பட்டன. இதற்காக ஏரியில் உலோகத்திலான உருளைகள் மீது மிதக்கும் பாலம் அமைக்கப்பட்டது. வீரர்கள் டைவ் அடிக்கும்போது கீழே உள்ள உருளைகள் அசையும். உடனே பாலம் அந்தரத்தில் ஆடும். அந்த நேரத்தில் வீரர்கள் மட்டுமின்றி, அமைப்பாளர்களும் தண்ணீருக்குள் விழுந்து விடுவர். பின்னர் இவர்கள் மேலே எழும்பி வருவது என நீச்சல் போட்டிகள் நகைச்சுவையாக நடந்துள்ளன. 1920-ம் ஆண்டு அன்ட்வெர்ப் ஒலிம்பிக் டைவிங் போட்டியில் அமெரிக்காவின் ஹால்பிரிஸ்ட் வெண்கலம் வென்று சாதனை புரிந்தார். இவரிடம் சக வீரரான டியுக் ஒரு சவால் விட்டார். அதாவது ஒலிம்பிக் கொடியை `லவட்டி’ கொண்டு வரமுடியுமா? என்பது தான் அந்த சவால். உடனே களத்தில் இறங்கினார் பிரிஸ்ட். கொடியை யாருக்கும் தெரியாமல் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டார். இந்த கொடியை 80 ஆண்டுகளாக பாதுகாத்து வந்தார் பிரிஸ்ட். 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக்கின் போதுதான் உரியவரிடம் ஒப்படைத்தார். அப்போது அவருக்கு வயது 103! 1924-ம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பாவோ யூர்மி என்பவர் ஆறு நாட்களில் ஏழு ஓட்டப் பந்தயங்களில் கலந்து கொண்டு சாதனை புரிந்தார். முதல் நாளில் நடந்த 1500மீ ஓட்டத்தில் தங்கம் வென்றவர், அடுத்த ஒரு மணிநேரத்தில் நடந்த 5000மீ பிரிவிலும் தங்கம் வென்றார்! டென்மார்க்கைச் சேர்ந்த லிஸ் ஹார்டெல் என்ற பெண், பக்கவாத நோயின் காரணமாக கால்கள் ஊனமாக இருந்தார். ஆனாலும் 1952-ம் ஆண்டு ஹெல்சிங்கி ஒலிம்பிக்கில் குதிரையேற்றம் போட்டியில் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். பெண் ஒருவர் குதிரையேற்றம் போட்டியில் பதக்கம் வென்றது இதுவே முதல் முறை. பதக்கம் பெறுவதற்காக அவர் மேடைக்கு அழைக்கப்பட்ட போது நடக்க முடியாத அவரை, அப்போட்டியில் தங்கம் வென்ற சுவீடன் வீரர் ஹென்றி செயின்ட்செர் மேடை வரை தூக்கிக் கொண்டு சென்றார். வெள்ளியை தங்கம் சுமந்தது ஆச்சரியம்தானே!