நீரிழிவு நோயால் உண்டாகும் நரம்புக் கோளாறு


  நீரிழிவு நோய் எனப்படும் சக்கரை வியாதியால் அவதிப்படும் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இவ்வேளையில் இந்நோய்யின் தாக்கம் மருந்து மாத்திரை, ஊசிகள் மூலம் கட்டுப்படுத்தப் படுகிறது.
எனினும் பூரணகுணம் அடைவது அரிதாகவே உள்ளது. நீரிழிவு வியாதியை கட்டுபடுத்தாத நிலையில் தொடர்ந்து இருக்க நேர்ந்தால் அதனால் ஏற்படும் பக்க அல்லது பின் விளைவுகளில் முக்கியமானது நரம்புகள் பாதிக்கப்படுவதாகும்.
   நரம்புகள் பாதிக்கப்பட்டால் அதனால் மேலும் பல முக்கியமான உடலின் செயல்பாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகின்றன. நம் உடலில் தொடு உணர்ச்சி, வலி உணர்ச்சி, உடல் அசைவு, நடமாட்டம், உணவு ஜீரணம், பாலியல் செயல்பாடு போன்றவற்றுக்கு தேவையான அனைத்துமே பாதிப்புக்கு உள்ளாகின்றன. பெரும்பாலும் இந்த இனிப்புநீர் வியாதி தோன்றிய பின் 10 அல்லது 15 வருடங்களுக்கு பின்புதான் இவ்வாறு நரப்புகள் பாதிக்கப்படலாம். உண்மையில் நீரிழிவு நோயால் நரம்புகளின் பாதிப்பு சரியாக தெரியாவிட்டாலும் சில காரணங்கள் யூகிக்கப்படுகின்றன.

  நரம்புகளின் மூலமாக தகவல் சமிக்ஞைகள் செல்கின்றன. இதை செயல்படுத்துவது சில இரசாயன மாற்றங்கள். உயர்ந்த இனிப்பு இதன் சம நிலையை பாதித்து செயல் இழக்கச் செய்யலாம். உயர்வான இனிப்பு இரத்தக் குழாய்களில் அடைப்பை உண்டு பண்ணி விடுவதால் நரம்புகளுக்கு இரத்த ஓட்டம் குறைவுபடுகிறது. இதனால் நரம்புகளுக்கு தேவையான பிராணவாயு குறைவுபடுகிறது. அதோடு நரம்புகளை சுற்றியுள்ள சுவர் பகுதியையும், இனிப்பு பாதித்து கெடுக்கலாம். இந்த நீரழிவுநோய் இதர பகுதிகளில் உள்ள நரம்புகளையும் பாதிப்படைய செய்யும். ஆனால் இதில் ஓர் வினோதம் என்னவேற்றால் இந்த நோய் மூளையை அல்லது நரம்பு மண்டலத்தை தாக்குவதில்லை. அப்படி மற்றும் நேர்ந்தால் வீபரிதம்தான். 
  இந்த நரம்புகள்தான் உடலின் அனைத்து பாகங்களுக்கும் மின்சார சமிக்ஞைகளை, சிக்கலான கம்பிவலை போல் பரவியுள்ளன. நீரழிவு நோயால் இந்த 'தொலைத்தொடர்பு' வேகம் குறையலாம். செய்தி தவறாகலாம் அல்லது தடைப்படலாம். இவ்வாறு நரம்புகள் கெடுவதை நரம்பு அழற்சி என்றும் கூறுவர். இது மூன்று வகைப்படும்: பலநரம்புகள் கோளாறு, குவிமைய நரம்பு கோளாறு, தன்னியக்க நரம்புக் கோளாறு எனப்படும். இவற்றை விரிவாகப் பார்த்தால் ஒவ்வொன்றும் வெவ்வேறு விதமாக பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

பலநரம்புகள் கோளாறு(Poly Neuropathy):  உடலின் எல்லாப் பகுதி நரம்புகளையும் இது பாதிக்கலாம். ஆனால் முக்கியமாக கைகளிலும். கால்களிலும் உள்ள பெரிய நீண்ட நரம்புகளைத்தான் கடுமையாகத் தாக்குகிறது. அதிலும் கால்களின் அடிப்பகுதியையும் ஒரேமாதிரி இரண்டு கால்களையும் பாதிக்கும். இதில் கால் அசைவு, நடப்பது போன்றவை பாதிக்கப்படுவதில்லை. அதற்கு மாறாக உணர்வு குன்றிப்போதல், வலி மதமதப்பு, கூசுதல், CRAMPS என்ற தசைச்சுழுக்கு, போன்றவை காணப்படும்.
குவிமைய நரம்புக்கோளாறு(Focal Neuropathy): இதில் ஒரு குறிப்பிட்ட நரம்பு பாதிக்கப்படலாம்.  அல்லது சில நரம்புகள் பாதிக்கப்படலாம். உடலின் ஒரு பகுதி மட்டுமே பாதிக்கப்படும். ஒற்றைவகையில் பாதிப்பு கொஞ்சங் கொஞ்சமாக முன்னேறும், ஆனால் இந்த வகை தாக்குதல் திடிரென்று ஏற்படும். இதிலும் மதமதப்பு, வலி, பலகீனம் உண்டாகும். இதுவும் எப்பகுதியிலும் ஏற்படலாம். அதாவது முகத்தில் கூட ஏற்படலாம். முகத்தில் கன்னப் பகுதியின் தசைகள் பாதிக்கப்பட்டால் அப்பகுதி செயலற்றும் மறுபக்கம் இழுத்துக் கொண்டும் காணப்படும். இதனால் முக அமைப்பு கோணாலாகும். இவ்வாறு கண் நரம்புகள், கை நரம்புகளும் பாதிக்கப்படும். 
தன்னியக்க நரம்புக்கோளாறு(Autonomic Neuropathy): இந்த நரம்புகள் நாம் எண்ணிப் பார்க்காத வகையில் தாமே செயல்பட்டு வரும்.  இவை உறுப்புகளை கட்டுப்படுத்துபவை. இருதயத்துடிப்பு, ஜீரணம், வியர்வை சுரத்தல், சிறுநீர் கட்டுப்பாடு போன்றவை சில உதாரணங்கள். இப்பகுதி நரம்புகள் இவ்வாறு தாக்கப்பட்டால், இந்த உறுப்பு செயலற்றுப் போவதால் நமது கவன்மெல்லாம் அங்கேயே திரும்ப நேரிடும்.