யு-டியூப்பில் காணொளி வலையேற்றுவது எப்படி?


இணையப் பயன்பாட்டில் காணொளிகள் பயன்படுத்தப்படும் இடமெல்லாம் பெரும்பாலும் யு-டியூப் பயன்படுத்தப்படுவது தவிர்க்க இயலாத ஒன்றாகி விட்டது. யு-டியூப் போலவே வேறு சில இணையத் தளங்கள் இருந்தாலும் பயனாளர் எண்ணிக்கையில் யு-டியூப் ஒரு கடல். அதனால் காணொளி முத்துக் குளிக்க ஏற்ற இடமாகிவிட்டது யு-டியூப். யு-டியூப்பில் காணொளியை வலையேற்றி விட்டால் அதை நம் இணையப் பக்கங்களில் ஒருங்கிணைத்துக் கொள்ள முடியும் (embedding) என்பது கூடுதல் சிறப்பு.



பிட்டுப் படங்கள் முதல் புட்டு செய்வது வரை, சுவற்றில் ஆணியடிப்பது எப்படி என்பது முதல் ஐ-போனை எப்படி அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் போடுவது என்பது வரை யு-டியூப்பில் காணொளியின் வகைகள் ஏராளம் ஏராளம். எப்போதும் யு-டியூப்பில் இருக்கும் காணொளிகளைக் கண்டு ரசிக்கும் நமக்கு சில நேரங்களில் நம்மிடம் இருக்கும் காணொளிகளைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் சூழ்நிலைகளும் நேரலாம். அதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் எப்படி வலையேற்றுவது என்பதை இப்பதிவில் காண்போம்.

முதலில் யு-டியூப் பயனாளர் கணக்கு வேண்டும். கூகுள் பெற்றுப்போட்ட அல்லது தத்தெடுக்கப்பட்ட வதவத குட்டிகளில் யு-டியூப்பும் ஒன்றென்பதால் கூகுள் பயனாளர் கணக்கு இருந்தால் யு-டியூப்புக்கு அது செல்லுபடியாகும். அப்படி கூகுள் கணக்கு இல்லாதவர்கள் www.youtube.com சென்று புதிய பயனாளர் கணக்கு ஒன்றை துவக்கிக் கொள்ள வேண்டியது. அடுத்து வலையேற்றம் செய்ய வேண்டிய காணொளி கோப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு யு-டியூப் சில வரைமுறைகளை வைத்துள்ளது. அவற்றிற்கு ஏற்றாற் போல் நம் காணொளிக் கோப்பு வடிவத்தை மாற்றியமைக்க வேண்டும். அதன்பின் நாம் வலையேற்றம் செய்யும் கோப்பினை யு-டியூப் FLV கோப்பு வடிவத்திற்கு மாற்றி நம் பயன்பாட்டுக்கு வழங்கும்.

சரி, அந்த வரைமுறைகள் என்னென்ன?. காணொளிக் கோப்பு avi, mp4, wmv, mov போன்றவற்றுள் ஏதேனும் ஒரு கோப்பு வடிவத்தில் இருக்க வேண்டும். காணொளியின் நீளம் பத்து நிமிடங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். காணோளியின் ஒளித்தரம் (resolution) 1280 x 720 வரை இருக்கலாம். இவற்றுள் avi அல்லது mp4 கோப்பு வடிவங்களும், ஒளித்தரம் 320 x 240ம், நீளம் 10 நிமிடங்களுக்கு மிகாமலும் இருக்குமாறு காணொளியினை வழங்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் உங்கள் காணொளியின் கோப்பு அளவு (file size) கட்டுக்குள் இருக்கும், அதனால் வலையேற்றம் செய்வதற்கு அதிக நேரம் எடுக்காமல் எளிதாக இருக்கும். இவற்றை எவ்வாறு செய்வது?. இருக்கவே இருக்கிறது இலவச மென்பொருட்கள்.



Any video Converter (avc) என்ற மென்பொருள் இலவசமாக கீழ்காணும் சுட்டியில் கிடைக்கிறது. இதுபோல் இன்னும் பல மென்பொருட்கள் இணையத்தில் ஏராளமாகக் கிடைக்கின்றன. கூகுளாடி விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம். மென்பொருளைத் தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் நிறுவிக் கொள்ளுங்கள். பின் ADD VIDEO என்ற பொத்தானை சொடுக்கி உங்கள் கணினியிலோ அலல்து குறிந்தகட்டிலோ இருக்கும் காணொளிக் கோப்பினை உள்ளிடுங்கள். பின்னர் காணொளியின் எந்த இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும், எந்த இடத்தில் முடிக்க வேண்டும் என்பதை நேரத்தினாலோ அல்லது scroll bar உதவியுடனோ தெரிவிக்க வேண்டும். அதன்பின் எந்த வடிவத்திற்கு கோப்பினை மாற்றியமைக்க வேண்டும் என்பதை உள்ளிடுங்கள். இங்கு உதாரணத்திற்கு mp4 வடிவத்திற்கு எவ்வாறு avc மென்பொருளில் உள்ளீடுகள் இருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டுள்ளது (பார்க்க படம் - க்ளிக் செய்து பெரிது படுத்திப் பார்க்கவும்).

தரவிறக்கச் சுட்டி:


மாற்றியமைக்கப்பட்ட காணொளிக் கோப்பு இயல்பாக My documents-AnyVideoConverter-mp4 என்ற இடத்தில் இருக்கும். அல்லது மென்பொருளில் நீங்கள் எந்த இடத்தில் சேமிக்கச் சொல்லி உள்ளிடுகின்றீர்களோ அங்கு சேமிக்கப் படும். அவ்வளவு தான், உங்கள் காணொளி வலையேற்றத்திற்கு தயார். யு-டியூப் வலைத்தளத்திற்கு சென்று மேலே வலதுபுற மூலையில் இருக்கும் upload என்ற பொத்தானை அமுக்கி உங்கள் காணொளிக் கோப்பை வலையேற்றம் செய்ய வேண்டியது தான்.
 நன்றி : சுடுதண்ணி