கருத்தடை மாத்திரை பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்கின்றனர்


கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தும் பெண்கள் அதிக நாள் உயிர்வாழ்வதாக பிரிட்டனில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொதுவாக கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துவதால் கர்ப்பப்பை புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் பெண்களைத் தாக்கும் என்று பரவலான எண்ணம் உள்ளது.
ஆனால் பிரிட்டனிலுள்ள ராயல் காலேஜ் ஆஃப் ஜெனரல் பிசிஷியன்ஸ் நடத்திய ஆய்வில் கருத்தடை மாத்திரையை பயன்படுத்துவதால் அதிக நாட்கள் பெண்களால் உயிர்வாழ முடியும் என்பது தெரியவந்துள்ளது.

இந்த கல்லூரியைச் சேர்ந்த பேராசிரியர் பிலிப் ஹானஃபோர்ட் இதுகுறித்து கூறியதாவது:

40 ஆண்டுகளுக்கும் மேலாக 46 ஆயிரம் பிரிட்டன் பெண்களிடம் இந்த ஆய்வை நடத்தினோம். கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தினால் பெண்கள் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும் என்பது இதிலிருந்து தெரியவந்துள்ளது.

இவற்றைச் சாப்பிடுவதால் கர்ப்பப்பை புற்றுநோய், இதய சம்பந்தமான நோய்கள் பெண்களைத் தாக்குவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
ஆனால் குறைந்த வயதுடைய பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும்போது அவர்களுக்கு மாரடைப்பு, மார்பக, கர்ப்பப்பை புற்றுநோய்கள் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

இளம்பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொண்டு சில ஆண்டுகள் கழித்து நிறுத்தி விடுகின்றனர். அடுத்த 10 ஆண்டுகளில் மாத்திரைகளால் ஏற்படும் எதிர்மறை விளைவுகள் அவர்களது உடலிலிருந்து மறைந்துவிடும். மேலும் சீரான இடைவெளிகளில் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனைகள், சுகாதாரமான வாழ்க்கை போன்றவற்றை கடைப்பிடிக்கும்போது கருத்தடை மாத்திரைகளால் பெண்களின் உடலுக்கு வரும் பாதிப்பு குறைக்கப்படுகிறது என்பதே உண்மை.

உதாரணமாக ஒரு லட்சம் பெண்கள் ஓராண்டுக்கு கருத்தடை மாத்திரைகளை சாப்பிடுவதாக வைத்துக் கொண்டால் இவர்களில் 52 பேர் மட்டுமே நீண்ட நாள் உயிர் வாழ்வதில்லை. மற்றவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்கின்றனர்.

அதே நேரத்தில் பழைய வகை கருத்தடை மாத்திரைகள் மட்டுமே பெண்களுக்கு பலன் அளிப்பதாக உள்ளது. அதாவது பழைய வகை கருத்தடை மாத்திரைகள் சாப்பிடும் அவர்கள் நீண்ட நாள் உயிர்வாழ்கின்றனர்.

அவர்களுக்கு மாரடைப்பு, புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.

ஆனால் புதிய வகை கருத்தடை மாத்திரைகள், பழைய வகை கருத்தடை மாத்திரைகளின் பார்முலாவிலிருந்து சற்றே வேறுபடுகின்றன. இதில் இடர்ப்பாடுகள் (ரிஸ்க்) அதிகம்.

இந்த ஆய்வை 1968-ம் ஆண்டு முதல் செய்து வருகிறோம். 23 ஆயிரம் பெண்கள் தொடர்ந்து 4 ஆண்டுகள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி வந்துள்ளனர். அவர்களில் 1,400 பேர் எந்தவித நோய்க்காகவும் மருத்துவமனைக்குச் சென்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதில்லை என்பது தெரியவந்தது.

இந்த மாத்திரைகளை சாப்பிடும் பெண்கள் இதயப் பிரச்னை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவர் என்று முதலில் சிலர் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது நடத்தி முடிக்கப்பட்ட ஆய்வில் கருத்தடை மாத்திரை சாப்பிடுவதால் 30 வயதுக்குள்பட்ட 1 லட்சம் பெண்களில் 20 பேர் மட்டுமே இறக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

இதேபோல 30 முதல் 39 வயதுக்குள்பட்ட 1 லட்சம் பெண்களில் 4 பேர் மட்டுமே இறக்கின்றனர்.

40 முதல் 49 வயதுக்குள்பட்ட பெண்களில் 14 பேர் மட்டுமே இறக்கின்றனர்.

50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் இறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

கருத்தடை மாத்திரைகளை சாப்பிடும்போது அதிக கவனத்துடன் இருந்தால் இதய நோய்கள் உள்ளிட்ட பிரச்னைகளிலிருந்து தப்பிக்க முடியும். ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுதல், சுகாதாரமான உணவு, அளவான உணவு, தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல் போன்றவற்றால் இந்த பிரச்னைகளிலிருந்து விடுபட முடியும் என்றார் அவர்.

பேராசிரியர் ஹானஃபோர்ட் நடத்திய ஆய்வு முடிவுகள் பிரிட்டிஷ் மருத்துவப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.